“உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”

கலைஞருக்கு என் அஞ்சலி – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

சில நாட்கள் நகர்ந்து பல சம்பவங்கள் கடந்து, பல்வேறு அஞ்சலிகளும் நினைவேந்தல்களும் நடைபெற்ற பிறகும், இன்றும் கூட, என்னால் இந்த இழப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. முழு செயல்பாடுடன் கூடிய அவரது தலைமையை பல மாதங்கள் முன்னரே நாம் இழந்திருந்தாலும், அவரது இருப்பு ஒன்றே நமக்குத் தேவையான ஆற்றலை அளித்து வந்தது. என்றோ ஒரு நாள் அவருக்கே உரித்த தனித்துவம் வாய்ந்த உன்னதமான தலைமையை ஏற்று மீண்டும் நம்மை வழி நடத்துவார் என்றே கருதி இருந்தேன். ஏனெனில், தன் வாழ்நாள் முழுவதும் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியவர் அவர். அவர் வாழ்வே ஒரு சாகசம் தானே!

அவரின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு, அவர் இல்லாத ஒரு உலகத்தில் இதுவரையில் நான் இருந்ததில்லை என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு தலைவராகவோ அரசியல்வாதியாகவோ மட்டும் அல்ல, என் தந்தைக்கு உற்ற நண்பராகவும் அவர் இருந்தது – எங்கள் இல்லத்தில் என் தந்தையும் அவரும் நெடுநேரம் சீட்டு விளையாடிய நாட்கள் – என் நினைவில் உண்டு. நான் பிறந்த ஆண்டு 1966, என்னுடைய சிறு வயதில், எனக்கு விவரம் தெரிந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில், அவர் தமிழக முதல்வராக இருந்தார், என் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால் இந்தப் பொறுப்புகளின் தீவிரத்தை அன்றைய காலகட்டத்தில் நான் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும்.

நீண்ட நெடிய அரசியல் பாரம்பரிய மிக்க ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றமுறையில் வேண்டுமானால் மற்ற குழந்தைகளை விட சற்று முன்னதாகவே இந்தப் பதவிகளை பற்றியும் அவற்றுடன் கூடிய பொறுப்புகளை பற்றியும் புரிந்திருக்க கூடிய வாய்ப்பு எனக்கு உண்டு. அவரது மகத்துவத்தை அன்றே ஓரளவு நான் அறிந்திருந்தேன் என்பதற்கு கீழ்காணும் படத்தில் உள்ள என் உடல்மொழியே சான்று.

1

சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் எத்தனை திடமான நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை எடுத்துரைப்பது எளிதல்ல. மறைந்த என் தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறந்த சபாநாயகராக (1996 – 2001) பலரால் நினைவுகூறப்படுகிறார். ஒரு சபாநாயகராக எனது தந்தையின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த அத்தனை பெருமைகளும், தலைவரின் பொற்பாதங்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில், சபாநாயகர்கள் முதலமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே பெரும்பாலும் செயல்பட முடியும். எனது தந்தையார் பலமுறை குறிப்பிட்டது போல, சட்டப்பேரவையில் உயரிய பண்பாட்டை அவரால் கடைபிடிக்க முடிந்ததற்கான முழுமுதற் காரணம் தலைவர் கலைஞர் அவர்களின் ஊக்குவிப்பும் அத்தகைய பண்பாட்டை அவர் எதிர்பார்த்தார் என்பதுமே.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீதான அவரது இணையற்ற ஈடுபாடு, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் காலம் தொட்டே இருந்த ஒன்று. சுய மரியாதை – சமூகநீதி – மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த நிலையான உறுதியின் காரணமாக இருமுறை அவர் ஆட்சியதிகாரத்தை இழந்தது உட்பட பல தியாகங்களை செய்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் மேலாக, சமூக சீர்திருத்தங்களுக்கான சட்டங்களை ஒவ்வொருமுறை அறிமுகப்படுத்திய போதும், திராவிட இயக்க வரலாற்றில் அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் / நிகழ்வு, தீர்மானத்தை முன்மொழிந்தவரின் பெயர் ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு, அதன்பிறகே அந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். எதிர்வரும் காலங்களில் நாம் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை, தங்கள் தொலைநோக்குப் பார்வை மூலம் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் வகுத்துள்ளனர். ஆனால், அவர்கள் வகுத்தளித்த கொள்கைகளை எல்லாம் மிகப்பெரிய அளவில் சட்டங்களாக்கிய பெருமைக்குரியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவருடன் ஒப்பிட்டாலும், தலைவர் கலைஞர் உருவாக்கிய சட்டதிட்டங்கள் பல வழிகளில், பல தலைமுறைகளை தாண்டி பலதரப்பட்ட மக்களுக்கு பயன் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சில தினங்களில், எனது தந்தையார் எதிர்பாராமல் காலமானபோது, எனது தாயாரும் நானும் நிலைகுலைந்து போனோம். எங்களது வாழ்வின் மிகவும் இக்கட்டான அந்தச் சூழ்நிலையின் போது தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாகவும், பலமாகவும் இருந்தார். எனது தந்தையின் ஒரே பிள்ளையாக, எனக்கு உண்டான பல கடமைகளை நான் செய்து முடிக்கப் போதுமான அவகாசத்தை அளித்து, அதன் பின்னர் என்னை அவர் அழைத்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அவரை நான் சந்தித்தேன். பொதுவாழ்வில் எனது தந்தையின் கடமைகளை ஏற்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பினை அவர் எனக்கு அளிக்க முன்வந்தார். நான் அப்போது அமெரிக்காவில் இருந்ததாலும், தவிர்க்க முடியாத குடும்பச் சூழ்நிலைகளாலும் அவர் அளித்த வாய்ப்பினை என்னால் ஏற்க முடியவில்லை. ஆகையால் நிச்சயமாக பிறிதொரு சமயம் அவரது அழைப்பை ஏற்பதாக தெரிவித்திருந்தேன். அப்போது தலைவர் கலைஞர் அவர்களின் மறுமொழி அவரது காந்தத் தன்மையையும், வசீகரத்தையும் வெளிப்படுத்தியது. “உன் தந்தை எதிர்பாராமல் மறைந்துள்ள இந்தத் தருணத்தில் நீ என்னுடன் இணைவது என்னுடைய வேதனையை குறைக்கும் என்று எண்ணினேன். ஆனால், இந்த இயக்கத்தில் இடைவிடாது பங்களிக்கும் உன் குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர மாட்டாய் என கூறியதில் மிகுந்த ஏமாற்றமடைகிறேன்”, என்று தலைவர் கலைஞர் தெரிவித்தார். மேலும், “நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். ஆனால், எனக்கு நீ ஒரு உறுதியளிக்க வேண்டும். உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு” என்று கூறினார். கண்ணீர் மல்க “என் வாழ்நாள் முழுவதும் அவர் மீது அன்பு செலுத்துவேன்”, என்று உறுதியளித்தேன்.

பிறகு, நான் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தலைமைச் செயலக வளாகத்தில் நடந்து சென்றபோது, ஒரு தொலைக்காட்சி நிருபர்கள் குழுவை கடந்து வந்தேன். அடுத்த 60 வினாடிகளில், நான் எனது காரில் ஏறுவதற்கு முன்பாகவே, எனது தந்தையார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை தலைவர் அறிவித்திருந்தார். தனிப்பட்ட முறையிலான அன்பையும், கழகத்தின் தேவையையும் கடந்து ஒருவர் மீது அவர் அன்பு செலுத்தும் பாங்குதான் அவரது ஆளுமைக்கான எடுத்துக்காட்டு. அந்தத் தருணத்தில் அவருக்கு 82 வயது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

பல்வேறு நிகழ்வுகளாலும், சூழ்நிலைகளாலும் 2011 தேர்தலை நான் தவறவிட்டேன். நான் விண்ணப்பிக்கவும் இல்லை. அவர் வற்புறுத்தவும் இல்லை. ஆனால், அவருக்கு நான் அளித்த வாக்கின்படி, எனது வங்கிப் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று, எனது தந்தையின் பழைய தொகுதியான மதுரை மத்திய தொகுதிக்கு 2016 பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தேன். ஏற்கனவே அவர் சொன்ன சொல்லின் படியும், கழகத்தின் செயல் தலைவரும் நம் அனைவரின் எதிர்கால நம்பிக்கையுமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்தும், பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், என்னை அந்த தொகுதிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு, ஒரு சில மாதங்கள் மட்டுமே அவர் முழு செயற்பாட்டில் இருந்தார் என்பது என் பேரிழப்பு. ஆனால், அந்தக் குறுகிய காலத்தில் கூட அவரை அவ்வப்போது சந்திக்கவும், அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பெறவும், சில நேரங்களில் அவரது பழைய நினைவுகள் குறித்து அவர் பேசுவதை கேட்கவும், மிகவும் ஆவலாக இருந்திருக்கிறேன். பல்வேறு ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு எதிராக அவர் அண்ணா அறிவாலயத்துக்கு நிலத்தை வாங்கி, கட்டிடங்களை எப்படியெல்லாம் எழுப்பினார் என்பது குறித்து என்னிடம் விவரித்திருக்கிறார்.

அவருடனான எனது கடைசி மாலை நேர சந்திப்பின் விவரங்கள் இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளன. தலைவரின் உதவியாளர் நித்யா அவரது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த தருணமது. சபாநாயகர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்த ஐவர் பட்டியலில் என் பெயர் இருந்ததைக் கண்டு நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஏனெனில் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு, பிறகு தற்காலிகமாக 5 நாட்கள் அவையின் செயல்பாடுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நேரத்தில், நான் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களோடு சட்டமன்ற நூலகத்தில் இருந்தேன் (அவையில் இல்லை). தி.மு.க உறுப்பினர்கள் நீக்கப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட குழப்பமான நிகழ்வுகளின் போது நான் அவையில் இல்லை. பின்னர் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையிட வேண்டி சட்ட வல்லுநர்களோடு ஆரம்பக்கட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்வதற்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இறுதியாக அப்போதைய செயல் தலைவரும், இன்றைய தலைவருமான நமது தளபதியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் தலைவரை நான் சந்தித்து, இப்பிரச்சனையை நாம் ஏன் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்கிற எனது தரப்பு வாதத்தை முன்வைக்க ஏற்பாடு செய்தார்.

நான் அவரை சந்தித்து சில மணித்துளிகளில் நடந்ததை விவரித்தேன். நான் சொல்வதை அவர் கவனமாகவும் உன்னிப்பாகவும் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இடைமறிக்கவுமில்லை, எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. இறுதியாக நான் “ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவையின் எந்தவொரு நடத்தை விதிமுறைகளையும் மீறாமல் இருக்கும் பட்சத்தில் அவரை அவையில் இருந்த வெளியேற்றவோ? நீக்கவோ இயலுமா? அப்படியெனில், சபாநாயகாரானவர் ஒரு நாள் கருப்பு சிவப்பு வேட்டியணிந்த அனைவரையும், அல்லது முகத்தில் தாடி வைத்துள்ளவர்கள் அனைவரையும், அவர் நினைத்தபடி அவையிலிருந்து தூக்கி எறிய முன்வந்தால் அது சரியாகுமா? அப்படியெனில் இது எப்படிப்பட்ட ஜனநாயகமாகும்?” என கேட்டேன்.

அவர் 30 வினாடிகள் அமைதியாக, எவ்வித சலனமுமில்லாமல், அவரது வலது கை விரல்களை கொண்டு அவரது சக்கர நாற்காலியின் ரிமோட்டை முன்னும் பின்னும் வருடியபடி கிளம்புவதற்கு தயாராவதுபோல் நகர்ந்தார். இதுபற்றி மற்றொரு நாள் பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு அவர் படுக்கையறைக்கு சென்றுவிடுவாரோ என எனக்குள் கலக்கமடைந்தேன். நான் எனது கருத்தை முழுமையாக எடுத்து கூறவில்லையோ என்று பயந்தேன்.. ஆனால் அவர் மிகத்தெளிவாகவும், துல்லியமாகவும் பேசினார். “இவையெல்லாம் மிகவும் முக்கியமான கேள்விகள். நீதிமன்றங்கள் மூலம் இவற்றுக்கான முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை ஆரம்பித்து நல்ல முடிவு எட்டுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 93 வயதில், குறைவான ஒரு கால அவகாசத்தில் தன்னுடைய ஒப்புதலை அளிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கின் தன்மை குறித்தும், அது நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய ஒன்று தனக்குள் நன்கு ஆராய்ந்து பின் உடனே ஒப்புதல் அளித்தார்.

கடந்த ஆண்டு காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் ஆரம்பித்த பிறகு, நான் கோபாலபுரம் செல்வது குறைந்தது. அவரோடு நீண்ட காலமாக நேரடித் தொடர்பிலிருந்த கழகத்தின் முன்னோடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருடன் அதிக நேரம் செலவிடும் உரிமையை நான் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றே கருதினேன். தலைவர் கலைஞரின் உடல் நிலையில் ஏற்பட்டிருந்த தொய்வு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், அவருடனான சந்திப்புகள் அவருடைய மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஓய்வுக்கும் இடையூறாக அமைந்து விடுமோ என்றும் கவலையுற்றேன்.

அவர் மறைந்த நாளிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வுகளின் போதும் அவரது ரத்த உறவினர்கள், பல்லாண்டுகளாக அவரது நேரடித் தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள் ஆகியோரின் வேதனையையும், வலியையும் கருத்தில் கொண்டு, என்னுடைய தனிப்பட்ட இழப்பையும் கடந்து, நான் சற்று விலகியே இருந்தேன்.

அவரது ஈர்ப்புத்தன்மை அவரது மறைவிற்கு பின்னும் கூட எப்போதும்போல வலிமையாக வெளிப்பட்டது. திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிய காரணத்தால், ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேழை சரியும் சூழல் ஏற்பட்டபோது, நான் அந்தப் பேழையின் அருகில் இருந்தேன். அரங்கிற்கு வந்த மக்கள் கூட்டம் பொதுவழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய நுழைவாயில் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, அவரைக் காண வந்தபோது, மிகுந்த சிரமத்துக்கு இடையில் அவரது பேரன்களுடன் சேர்ந்து நானும் பேழையைத் தாங்கிப் பிடித்திருந்தேன். அவரது பேழையை பாதுகாக்கும் அந்தத் தருணத்தில், நான் அவரது நெஞ்சுக்கு நேராக இருந்தேன். எனது உடலால் அந்தப் பேழையை தாங்கி நின்றபடி, அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர் சாதனப் பெட்டிகள் பேழையின் மீது விழுந்து விடாதபடி எனது காலால் அவற்றைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி அலைகடல் போன்ற தொண்டர்களுடன், உடன் பிறப்புகளின் நடுவே இருந்தாரோ, அதுபோலவே தனது மறைவிற்கு பின்பும் இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய வாழ்வையும், இந்த சமுதாயத்தையும் மேம்படுத்த ஓய்வின்றி எடுத்த முயற்சிகளுக்கு, பலகோடி மக்களைப் போலவே நானும் பலவகையில் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன். அந்த நன்றியுணர்வையும் கடந்து, எனது தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு அவர் என்னிடம் கூறிய “மற்ற எல்லாவற்றையும் இழந்த பிறகும் அன்பும், பாசமும் மட்டுமே நம் வாழ்க்கையில் நாம் பெறக்கூடிய சிறப்பான நற்பலன்களாகும்” என்ற வார்த்தைகளின் உன்னதத்தை அந்த தருணத்தில் உணர்ந்தேன். ஏனெனில், இப்படிப்பட்ட தருணங்களே ஒருவரை பற்றிய நினைவலைகளை எப்போதும் நம் மனதில் நிலையாக நிறைந்திருக்கக் செய்யும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபின் தலைவர் கலைஞரை நான் சந்தித்த நேரத்தில், எடுக்கப்பட்ட படங்களை அவருடைய உதவியாளர்கள் எனக்கு அன்புடன் அனுப்பி வைத்தார்கள். இவை எடுக்கப்பட்டதே எனக்குத் தெரியாமல் இருந்த நிலையில் , எனக்குக் கிடைத்த பொக்கிஷமாகவே இந்தப் புகைப்படங்களை நான் கருதுகிறேன்.

2
3

என் உணர்வுகள் என் கண்ணை மறைக்கலாம். ஆனால், இந்தப் புகைப்படங்கள் அவர் மூலம் எனக்கு கிடைத்த அன்பையும், பாசத்தையும் தவிர வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அளித்த உறுதிமொழி “இறுதிமூச்சு உள்ளவரை அவர்மீது என்றும் மாறா அன்புடன் இருப்பேன்” என்பது. இந்தப் புகைப்படங்கள் நான் அவருக்கு அளித்த உறுதிமொழியை என்றுமே என் நினைவில் இருக்கச்செய்யும்.

19 thoughts on ““உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”

Add yours

  1. A very well-put article!! I have never lived in a Tamilnadu without Kalaignar either! I feel the same way you all feel. If I come to Chennai in future, I will be landing on the land without his physical presence. I just can’t believe it😑

    Liked by 1 person

  2. We have lost an amazing leader as well as great human. Many heart touching and interesting lines. Good one Anna, keep writing.

    Like

  3. தலைவர் நல்ல தலைவர்களை உருவாக்கி நம்மோடு இன்னும் வாழ்கிறார். செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறையவே உள்ளன. அடக்கு முறையும், மதவாதமும் சேர்ந்து நம் நாட்டை உலுக்கும் அதே வேளையில், தமிழ் நாட்டையும் சீர் குலைக்கின்றன. சேர்ந்து நின்று தமிழகத்தையும், தேசியத்தையும் காப்போம்

    Like

  4. வாழ்த்துக்கள் அண்ணா.. உங்கள் இப்பணியும் சிறக்க வாழ்த்துக்கள்…..

    Like

  5. அன்பும், ஆளுமையும் சேர்ந்த கோட்டை கலைஞர்,
    எளியவர் முதல் அறிவார்ந்தவர் வரை உள்ள இயக்கத்தின் தலைவர்.
    தங்கள் பணி தொடரட்டும், இயக்கம் செழுமை பெறட்டும்…

    Like

  6. Nice and simple eulogy to the departed leader, a perfect tribute to the high relationship maintained by your family with the party.

    Like

  7. அன்பின் காணிக்கையை நவரத்தினங்களால் செதுக்கி விட்டீர்கள்.தொடர்க உங்கள் பணி வளர்க உங்கள் பாரம்பரிய நட்பு தலைவர் தளபதியுடன்.

    Like

  8. நெகிழ்ச்சியும் உள்ளார்ந்த பாசத்துடன் எழுதியிருகிறிர்கள். தொடரட்டும், படரட்டும் தங்களான் பணிகள்.

    Like

  9. தங்களின் தலைவரின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் மிகவும் பாராட்டத்தக்கது
    தங்களது கழகப் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடய மனமார்ந்த வாழ்த்துகள்…

    Like

  10. When MGR offered a ministerial post to your father , he refused it confirming his principled loyalty.
    Chip of the old block. We are proud of you.

    Like

  11. மிக சிறப்பான முறையில் நினைவு கூர்ந்த கட்டுரை சார்

    Like

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started